Thursday, December 13, 2012

அகலின் ஒளியதில்..


தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன தனதான


அகலின் ஒளியதில் வன்முரல் வண்டினை
நிகரும் எனதரு நெஞ்சமும் உன்றனைப்
பகலொ டிரவிலு வந்தனை செய்திடும் முருகோனே!

கனியின் சிறுவிளை யாட்டுமு டிந்ததும்  
மயிலின் சிறகெழத் தென்னகம் வந்துடை
ஒயிலும் துறந்திரு கற்பழ னிக்கமர் மலையோனே!

மறமொ டயிலது விட்டது யர்ந்திடப்
புறமொ டவுணரின் கொட்டம யர்ந்திட
உறவொ டமரரின் வஞ்சிம ணந்திடு மிறையோனே!

சுரமும் சுனைநிறை வெற்பிலி யன்றிடுந்
தெரிவை களவும ணம்புரி யும்உனைக்
குறவர் குலமது வந்துவ ணங்கிடும் அழகோனே!

உழலும் புவியதின் வந்தவர் வெந்ததும்
அழிய அமைவுறு ஆண்டவர் கண்ணெரி
அழலில் அழகொடு தோன்றிய பன்னிரு விழியோனே!

அரிய சிறுவரும் அப்பரொ டுப்பொரு
தரிய சிரமறு பட்டது பெற்றிடு
பெரிய களபக ரத்துமு கத்தவர்க் கிளையோனே!

சிதறு மகமது ஒன்றிட உந்தனின்
பதமும் தொழுதிடக் குன்றிய தொண்றிய
தறியு மறிவினை என்றனில் உந்திட வருள்வாயே!

விழுமி யடியினில் கொட்டிய பூக்களும்
செழிய நிறமிக நின்றிடு தோற்றமும்
விழியி னொளியொடு பார்த்தறி வூட்டிய பெருமாளே!

3 comments:

  1. //விழியின் ஒளியொடு பார்த்து அறி வூட்டிய பெருமாளே!//

    ரொம்ப அழகா நிறைச்சி இருக்கீங்க;
    முருகுறு வாழ்த்துக்கள்!
    என்னவன் அருள் பெருகுறு வாழ்த்துக்கள்!

    சந்தம் நிரைத்து,
    பொருள் நிறைத்து,
    சலீர் சலீர் -ன்னு வந்திருக்கு திருப்புகழ்!

    //சுரமும் சுனைநிறை வெற்பிலி யன்றிடுந்
    தெரிவை களவும ணம்புரி யும்உனைக்
    குறவர் குலமது வந்துவ ணங்கிடும் அழகோனே!//

    வெற்பில் "இயன்றிடும்" தெரிவை = வள்ளி!
    எனக்கு ரொம்ப புடிச்சிப் போச்சி இந்த வரி:)

    நோன்பு இயற்றுவாங்க; ஆனா இவ இயற்றவில்லை; இயன்றாள்!
    அந்த நுட்பமான வேறுபாடு;

    கம்பர் இராமாயணம் இயற்றுவார்;
    இளங்கோ சிலம்பு இயற்றுவார்;
    மக்கள் நோன்பை இயற்றுவார்கள்;
    ஆனா, வள்ளி?

    நோன்பு இயற்றவில்லை; இயன்றாள்!
    அந்த நோன்பாகவே மாறிப் போனாள்!

    நோன்பால் உண்டாகும் பசி, தாகம், வலி
    நோன்பு முடிஞ்சதும் அடங்கீரும்!
    ஆனா நோன்பாவே மாறிய இவ, அந்தத் தாகம்/வலி-யாவே மாறிட்டா!

    இயற்றினால் இது கிடைக்கும் -ங்கிற எண்ணம் கூட இல்லாம, அவனே -ன்னு இயன்றாள்!
    அந்தத் தாகம் தணியாது; தணிகையானுக்கு என்றும் இருக்கும் இவள்/தாகம்!

    மாறிலா வள்ளி வாழ்க
    வாழ்கசீர் அடியார் எல்லாம்!

    ReplyDelete
    Replies
    1. இந்திரன் மகளும் அல்ல, வானுலகில் முன்னரே பார்க்கும் வாய்ப்பு அமைவதற்கு;
      உற்றார் உறவினர் உதவி கொண்டு, மணம் முடிக்கவும் முடியாது; எட்டாத் தூரத்தில் இருக்கும் எட்டிக்குடியான்;

      அவனைப் பார்த்தது கூட இல்லை! ஆனா பிறவிப் பந்தம்;
      அவன் ஏற்றுக் கொள்வானா? = தெரியாது;

      இவள் வெறும் = குற மகள்;
      அவன் பெரும் = அரன் மகன்;
      அவன் ஏற்றுக் கொள்வானா? = தெரியாது;

      ஆனா, இந்தக் காதல் காலங்காலமாய் உண்டு!
      தமிழும் முருகுமாய், நீயும் நானுமாய், ஏக போகமாய்!
      என் கொங்கை, முருகத் தமிழ் அன்றியோர் வேறிடம் சேரற்க!

      ஒருதலை ஆயீருமோ? = தெரியாது! ஆனா...
      அறுதலை அன்றியோர் ஆறுதலை வேண்டாள்!

      மலையின் காடு மேடெல்லாம் நடந்தே தேய்ந்தாள்;
      வாழ்க்கையின் காடு மேடெல்லாம் நடந்தே தேய்ந்தாள்;
      அதான்...
      அவள் கையை மட்டும் பற்றாது, காலையும் பற்றினான் முருகன்!
      = பாதம் வருடிய மணவாளா
      = குறமகள் இங்கித மணவாளா

      அந்த இங்கித முருகன்;
      அவன் தாகம் என்னுள் அடங்காமல் இருக்கக் கடவது!



      Delete
    2. நன்றி கண்ணபிரான் அவர்களே!

      Delete