Sunday, January 22, 2017

தமிழினம் செய்யும் இளையோர் நாங்கள்!

அறந்தரு அரசர் அளவிலோர் அன்றே
புறங்கெடு அவுணன் ஒருவன் மாள
நெறியொடு செவ்வேள் அயில்கொளல் ஆனோய்!
அடியொடு அறங்கெடு வஞ்ச ரின்றோ
முடியொடு காசு ஆக்குதல் தேடிக்
குடியடி நாடி யாள்வோ ரானார்!

வையகம் ஆள அன்று
அரசர்தாம் ஆயிரம்பேர்!
ஆயினும் முருகா! உந்தன்
கையிலே வேலை ஏந்திக்
கொய்யவோர் அசுரன் தானே!
ஐயகோ! இன்றோ இங்கு
மையலில் மக்கள் என்று
மக்களின் கால்பிடித்துப்
பையிலே பணம் பதுக்கிப்
பார்க்கும் பல்லாயிரம் பேர்
பாசமாய் ஆள வந்தார்!

வஞ்சித் துறுதி தருமொழி தந்து
நெஞ்சுறு தீங்கின் முறையாற் குடிதனை
அஞ்சுதல் பெருகப் பிரித்த லாற்றி
மிஞ்சக் கொடிகொள் ஆட்சி யென்பகர் 
மஞ்சத் துறைவோர் அளவில ராமே!
நெஞ்சிலே வஞ்சம் வைத்து
எங்களை அஞ்சவைத்துச்
சாதிகள் சண்டை தந்து
கட்சிகள் கொடிகள் கொண்டு
சத்தியம் கோடி சொல்லித்
தலைவராய் வந்தீர் நீங்கள்
திருடர் தாம் ஆயிரம்பேர்!

அயலவ ரீசிறு செல்வம் பணிந்து
இயன்றிடு வலியா லெம்மைப் பணித்தீர்|
அந்நியன் அடிமை செய்தான்
உங்களைப் பணத்தை வைத்து!
எங்களை அடிமை செய்தான்
உங்களின் பலத்தை வைத்து!

அயலகத் துதித்த கேடின் கள்வோர்
வயலகத் தோடு ஏறு கவர்ந்ததன்
மார்பிளந் தூணின் வாணிகஞ் செய்து
ஏர்பிடித் தோடப் பொறிபல தந்து
தூர்செய் எருப்பல சேர்த்து விற்றெம்
ஊர்நிரைப் பசும்பால் நஞ்சாய் மாற்றிப்
பேர்முறை யறியா நோய்தந் தெமது
கார்தரு செல்வம் யாங்கவர்ந் தனரே|
வெளிநாட்டின் நாதியற்ற
கார்ப்பரேட் கள்வர்களே
எங்களின் முதுகெழும்பாம்
உழவுதன் ஆணி வேராம்
காளையைக் கவர்ந்து சென்றீர்!
கறியாக்கிக் காசு கண்டீர்!
இயந்திரம் கொண்டு வந்தீர்!
செயற்கையாய் உரமும் விற்றீர்!
பாலிலே நஞ்சு வைத்தீர்!
நோயிலும் வணிகம் செய்தீர்!

தமிழ்தரு நாட்டின் தகைமைக் கெஞ்சிய
திமிலுடை யேற்றின் திடல்விளை யாடித்
திறங்காண் காளையர் தோள்தேர் வஞ்சியர்
திகழ்நகை மழலையர் தான்கொண் டாடிய
களிதடுத் துறைவீர்! கொல்லேற்றுக் கோடே
கொலைதர வெறினும் வாள்கொடு கொல்லோம்
களம்புகு காளை தழுவிடு மரபோம்!
எஞ்சிய காளையோடு
கொஞ்சிய காளையர்தம்
உரிமையைக் கொல்லப் பார்த்தீர்!
பிஞ்சுகள் பெண்கள் கொண்ட
பாசத்தைப் பறிக்கப் பார்த்தீர்|
திமிலுடை ஏறுதன்னைக்
கொல்வெறி கொண்டதெனினும்
கல்துளைக் கத்தி கொண்டு
கொல்வதெம் வீரமல்ல!
திறனுடன் கட்டித் தழுவிக்
கொள்வதே எங்கள் பண்பு!

அடக்கல் செய்தீர் அகந்தைக் கடங்கோம்
கடல்போல் வந்தே கடந்து வென்றே
முடைதனை யீண்டொ ருமுறை யடுத்தோம்
தடையினி தரினும் தடந்தோள் துவளோம்!
திமிறுடன் அடக்க வந்தாய்
தமிழன்தன் தகைமை கண்டாய்!
பொறுத்தது போதும் என்று
பொங்கினோம் கண்டாய் இன்று!
ஒருமுறை பார்த்துவிட்டோம்!
ஒடுக்குதல் கண்டுவிட்டால்
இனிவரும் காலமெல்லாம்
பலமுறை பாய்ந்து வருவோம்!
மறமு மன்பு விரைவுங் கொண்டோம்
அறமு மருளு மாற்று மிளையோம்
அரசு ஆவீர் அயலீர் காணீர்
விரிச லின்றி வாகை கொண்டே
முரசு மீட்டி அச்சந் தந்தோம்
ஒருசிறு தொடக்க மீண்டு கண்டீர்
அரும்பல புதுமை செய்வோம்
அரும்புகழ் கொள்பெரு தமிழினஞ் செய்தே!

(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)
ஈரமும் இரக்கம் கொண்டு
வீரமும் வேகம் உண்டு
மாண்புகள் கோடியுண்டு
மாணவர் இளைஞர் நாங்கள்!
அரசியல் செய்ய வந்தோர்
அந்நியர் நன்கு கேளீர் -
இன்றுதான் தொடக்கம் தந்தோம்!
வென்றுதான் அச்சம் தந்தோம்!
என்றுமே புதுமை செய்யும்
ஒன்றிய இனம் படைப்போம்!

Sunday, June 26, 2016

காதல் உணர் நெஞ்சு!

காத லென்றோ ருணர்வி லுறுவோர்
காத லென்பது யாதென வுரைத்தும்
காத லென்பதி யாது யாதென
ஏது முணர்வி லறியா திருந்தேன்!
காத லென்றே வந்ததோர் அரிவையொடு
ஓத லென்பதி யாது மின்றித்
தாயை யறியுஞ் சிறுபார்ப் பன்ன
மாயை கண்டது போலே
ஆய உணர்ந்த  வெஞ்சிறு நெஞ்சே!
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)


காதல் - அதை
மோதல் செய்தோர் பலர் 
யாதென உரைத்தும்
காதல் யாதென என்னறிவுக்குப் புலப்படவில்லை..!

பெண்ணே! நீ வந்தபின்னே -
தாயைச் சிறு கன்று தானாய் அறிவது போல்
பாயும் காதல் அதை அறிந்தேன்,
மாயம் போல்.. யாரும் சொல்லித் தராமலேயே!

Wednesday, October 29, 2014

வல்லயிலை வரையேவு மலர்மார்பா!

தந்தனன தனதான தந்தனன தனதான
தந்தனன தனதான ..... தனதான

மண்பரவு முயிர்யாதும் விண்ணுரையு மமரோரும்
      துன்பமிக வுறுமாறு கொடிதான
மன்னலுற முடியாத வஞ்சினமு மிகவான
     செய்துறையு மவுணோரும் பொடியாக

கண்ணனலி னருளோடு திங்களணி யிறையோனும் 
      தந்தருளிக் கயலாடு நிலையோடு
கண்டதொரு மலர்போல செங்குவளை முகமாறு  
      கொண்டசிறு சுனைதோன்று மிளையோனே|

தண்திரையற் தனலாகத் திண்மணலும் அனலாகத்
      தென்வளியும் தணியாத புயலாகத்
தொன்வெளியுங் கனலாகத் தங்கநிற முகமாறும்
      செஞ்சுடரின் நிறமாகிச் சினமேகி

வண்டுமுரல் மலர்மார்பு வந்தணையு மொளிவீசு
      வல்லயிலை விரைவோடு வரையேவி
வந்தமரர் சிறைமீள வல்லவுணர் கிளைவீழ
      செந்தினகர் நிலையான பெருமாளே!

தகைத்தவர் கொம்பினோடு உறைவோனே!


தனத்தனந் தந்த தான
    தனத்தனந் தந்த தான
        தனத்தனந் தந்த தான ..... தனதான



விளித்திடுங் தொண்டர் காண
    விருப்புடன் எந்த நாளும்
        விரைந்திடும் மஞ்ஞை யோடு வருவோனே!

    விளங்குமவ் வெற்பு மோதிப்
        பிளந்திடும் வெற்றி வேலும்
           திளைத்திடும் அன்பு நாளும் உடையோனே!

அளித்தொடுங் கொன்றை யோடு
    அனிச்சமும் வஞ்சி யாம்பல்
        அணித்துறும் செம்மல் சேட லதனோடு

    அடம்புசெவ் வல்லி யாரல்
        கடம்புவெண் தும்பை தோன்றி
             மடம்நிறைந் திட்ட ஞாழல் மடற்தாழை

களித்திடுஞ் செம்மல் சேடல்
    கரந்தையும் புன்னை பீரம்
        கவர்நிறப் பிண்டி வாகை யிருள்நாறி

    குறிஞ்சியுங் கண்ணி யோடு
        குருந்தமுந் தில்லை கோடல்
            செருந்தியுஞ் செம்மல் சேடல் உடனான

தளிர்க்கரங் கொண்டு லாவு
    தகைத்தவர் கொம்பி னோடு 
        திருப்பரங் குன்று லாவு முருகோனே!

    தனிப்பெருந் தெய்வ மாகித்
        தமர்க்குறுந் துன்ப மாற்று
            திருப்பரங் குன்று வாழும் பெருமாளே!

Monday, October 27, 2014

ஆர் அறிவு என்றிருந்து வடிவோனே!

தானதன தந்த தந்த தானதன தந்த தந்த
      தானதன தந்த தந்த ...... தனதான



வானவரும் பெற்றதந்த மாதுதனைக் கைப்பிடிக்க
      வாதையரின் கொற்றொடித்த மயில்வீரா!
வாகைமலர் கொண்டுவந்து சூடுஎனத் தந்ததந்த
      வேலுடைய கைதிறந்து அருள்வோனே!

கானமுடை வெற்புறைந்த கோதைகுறத் திக்குகந்த
      காதல்தர வந்திறங்கி யணைவோனே!
காவலுடை நெஞ்சகத்து வாயிலது கண்டிடித்துக்
      காணறிவு தந்துணர்த்தி யுறைவோனே!

ஆனபல வையகத்து மாயையது பெற்றெடுத்த
      ஆருருவம் எங்குமங்கு அழகாக
ஆவலிரு ஐந்துணர்ந்த ஆர்புலனெங் கும்வழிந்த
       ஆர்அறிவு என்றிருந்து வடிவோனே!

மானவரின் உள்ளுறுத்து மாயையது கண்டிருக்கு
      மாருயிரின் உள்ளிருந்து இயல்வோனே!
மாவின்கனிக் கென்றுவந்து ஆவின்குடி யங்கமர்ந்து
      மாபழநி வெற்புறைந்த பெருமாளே!

Sunday, October 26, 2014

குறக் கோதை உறைமார்பா!

தனதன தான தனதன தான
      தனதன தான ...... தனதான


அழகுரு வாகப் பரவிடு தோகை
      அருகினி லாடு மயிலோனே!
அணியொடு தோன்று கரமிரு ஆறு
      அருள்தரு வீர அயிலோனே!

தழையொடு பூத்த நறுமலர் யாவும்
      திரள்தரு கோவை யணிமார்பா!
திணையொடு பூத்த புனமது காத்த
      திகழ்குறக் கோதை யுறைமார்பா!

பழமென ஞான மொழியறி வாயப்
      புரமெரி யூட்டு இறையோனும்
பரவிய பாரின் உயிரது யாவும்
      பிறப்புற நாளு மறையோதும்

கிழவனுங் கேட்கக் கனியுள மேகிக்
      குழவியு மாகிப் பொருளோதிக்
கழனியு ளாக வுயர்திரு வேர
      கமமரு வானர் பெருமாளே!

Saturday, October 25, 2014

மலையுறை முருகோனே!

தனதன தனதன ..... தனதான


பனியுறை இறையவர் மகவோனே!
      பகையவர் குடிகெடு மயிலோனே!

இனியன அறம்பகர் இளையோனே!
     இமையவர் தொழுதிடும் இறையோனே!

தனியொரு நிகரறு தலைவோனே!
      தமிழொடு மலையுறை முருகோனே!

கனிமுதிர் மரமிக அடர்சோலை
      அழகுற அமர்ந்தருள் பெருமாளே!