Wednesday, November 18, 2009

படுதற்கினிதே இத்துயர்!

இரைவயிற் சென்ற தாய்பிரிந் துழலும்
கவையிடைக் கூட்டின் மென்குரற் பார்ப்பு
கவ்விய நெல்லுடன் புள்வரக் கண்டு
தவ்விய நெஞ்சு ஆறுதல் போல
சேய்த்தே செல்லின் காதல் கொண்டு
வெஃகி வெதும்பி வேமென் னெஞ்சு
எஃகின் ஊனும் தேனென உருகிக்
கிடந்து தணியும் அணித்தே இருப்பின்
எந்நிலை உளேன்யான் அறியேன் எனினும்
தேன்படு எறும்பின் கடுந்துயர் ஏய்ப்ப
யான்படு இடரும் உண்டே
படினும் இந்நிலை படுதற் கினிதே.
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)

இரை தேடிச் சென்ற தாய்ப்பறவை வரும் வரை அஞ்சித் துயரில் உழன்ற குஞ்சு, அப்பறவை வாயில் நெல்லுடன் வரக்கண்டு நெஞ்சாறும். அதே போல் தலைவி தொலைவில் இருப்பின், காதலில் வெந்து அவளது நினைவில் தவிக்கும் தலைவனின் நெஞ்சானது, அவள் அருகில் வந்தவுடன் தணிகிறது. தலைவன் தான் எந்நிலையில் உளேன் என்றறியாமல் இருக்கிறான். இனிய தேனில் வீழ்ந்த எறும்பு மீள முடியாது இடர்ப்படல் போலத் தானும் உளேன் என்கிறான்.

4 comments:

  1. எனக்கு இந்த உவமானம் தேவையா/பொருத்தமானதா என்று புரியவில்லை.. விளக்கவும். காத்திருப்பது யார்? எதற்காக?

    ReplyDelete
  2. மீதமுள்ளவை நீயே நினைத்துச் சுவைக்க :)

    ReplyDelete
  3. நாம எல்லாம் என்னக்கி மாம்ஸ் படிச்சிருக்கோம்? ஏதோ நம்மலால முடிஞ்சுது .. :)

    ReplyDelete