Friday, July 15, 2011

கருப்பு வெள்ளைக் காதல்


செந்தமிழ் படிக்கத் தெரியாது உனக்கென
மௌனக்கவிதை நான் வரைந்தேன்!
மௌனம் புரியா மடந்தை எந்தன்
காதல் கேட்க நீ துடித்தாய்.

நான் காதல் சொல்லும் வார்த்தை கேட்டுச்
சொட்டுச் சிரிப்பை நீ நகைத்தாய்.
ஓரப்புன்னகை ஒழிந்தே வந்ததால்
வெட்கப்பட்டு நான் சிரித்தேன்!

உன் குட்டைக் கூந்தலின் பின்னலின் பின்னே
ஒட்டிக் கிடக்க ஓர் பூக்கொடுத்தேன்.
உன் நெட்டை மூக்கின் முன்னே முகர்ந்து அதைப்
பட்டைப் பையினில் நீ விடுத்தாய்!

உன் வீட்டு வாசலின் ஸ்டிக்கர் கோலத்தை
எட்டிப் பார்த்து நான் ரசித்தேன்.
உன் கட்டை விரலின் மிளிரும் மையுடன்
வெற்றுத் தரையில் கோலமிட்டாய்!

உன் வெட்டிப் பேச்சின் எண்ணம் மேல்வரச்
சிட்டுக்குருவியாய்ப் பசித்திருந்தேன்.
என் வெட்டுப் பார்வையை நினைத்துச் சிரித்துக்
கட்டிச் சோற்றினை நீ புசித்தாய் ..

உன் மயக்கும் பார்வை மையலில் நான்
தூக்கம் இன்றித் துடித்திருந்தேன்.
என் நினைவுக் கனவு வருமெனக் கண்டு
இரவும் பகலும் உறக்கம் கொண்டாய்.

நாகரிகத்தில் வளர்ந்ததனால் உன்
நாணம் போக நேர்ந்ததடீ ..
நாட்டுப்புறமாய் நானிருந்தும் நம்
நெஞ்சம் ஒன்று சேர்ந்ததடீ ..

2 comments: